இந்தியாவுக்குப் பொருந்தாத இந்து கோட்பில்களும் பொது சிவில் சட்டமும்…

இந்தியாவில் ஆண் பெண் ஆகிய இருபாலரது வாழ்க்கை முழுவதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடியும் தமக்கான சிவில் சட்டங்களை கொண்டு இன்றளவும் திகழ்கின்றன. அதாவது அக்குடியின் படி வாழக்கைக் கண்ணோட்டம், அதன்வழியே பிறப்பு முதல் இறப்பு வரை படிநிலைகள், எந்த நிலையில் என்ன நடக்க வேண்டும், அதற்கான வரம்புகள், பொறுப்புகள், கடமைகள், எழும் சிக்கல்களுக்கான தீர்வுகள் என அனைத்தையும் கொண்டு திகழ்கின்றன.

ஆனால் இவற்றை ஒரு குடியில் பிறக்கும் குழந்தைகள் அறிந்து கொண்டு விடாத படிக்கு பிரிக்க செய்யப்பட்ட ஏற்பாடே பள்ளிக் கல்வி முறை. பள்ளிக்கு அப்பாலும் பள்ளிகளின் வாயிலாக தரப்படும் கல்வியை சொல்லித்தர நிச்சயமாக பல வழிகளில் முடியும்.

இதில் தந்தை வழி சமூகங்களும் உள்ளன. தாய் வழிச் சமூகங்களுக்கும் உள்ளன. இவையிரண்டுமே இருபாலரது முழு வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ஏற்பட்டவையாக உள்ளன.

மைசூர் மகாராஜா குடும்பம், திருவனந்தபுரம் அரச குடும்பம் அதன்படியே நாயர்கள் என்று நமதருகே எழும் தாய் வழிச் சமூக மரபுகள், துளு மக்களுக்கு (பன்ட், பில்லவா முதலிய குடிகள்) பூதாள பாண்டியன் ஏற்படுத்திய தாய்வழி ஆலியசந்தான மரபு என நீண்டு, மேகாலயாவில் காசி எனப்படும் குடியின் வாழ்க்கை முறை என்று விரிகிறது. இவை ஒன்றுக்கொன்றும் கூட பல வேறுபாடுகளை கொண்டுள்ளன.

இப்படி எண்ணற்ற வாழ்க்கை முறைகளை ஆயிரமாயிராம் ஆண்டுகளாக கொண்டு திகழும் இந்நாட்டுக்கு ஆணுக்கும் பயன்படாது பெண்ணுக்கும் பயன்படாது யாருக்கும் பயன்படாது இவை எல்லாவற்றையும் நாசமாக்கும் நோக்குடன், யாருடைய முழு வாழக்கைக்கும் உதவாத ஒரு உருப்படாத முறையை திணித்தவை தான் இந்து கோட் பில்கள்.

ஒரு உண்மயான இந்துத்வ அரசென்பது மேற்படி அனைத்து இந்துக் குடிகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை மீட்டெடுத்துக் கொள்ள ஆவண செய்ய வேண்டுமே அன்றி அதை சுத்தமாய் துடைத்தெறியும் வண்ணம் பொது சிவில் சட்டமென்று முன்மொழிவது, பாரம்பரியம் பாரம்பரியம் என்று பேசுவோரைக் கொண்டே இந்நாட்டின் பண்பாட்டை கொலை செய்தவற்கு விரித்த வலையில் இந்துக்கள் சிக்கிக் கொண்டுவிட்டனர் என்பதைக் காட்டுவதாகும். தற்கொலைக்குச் சமமாகும்.

பெண்ணியம் பேட்ரியார்ச்சி என்று பேசும் இருபாலருக்குமே கூட தேவைப்பட்டால் மேற்படி தாய்வழி சமுதாயங்கள் எவ்வாறு வாழக்கை முழுவதையும் எடுத்துக் கொண்டு தீர்வுகளை அளிக்கின்றன என்று ஆராய்ந்து அவ்வழி போல் தமது வழிமுறையை அமைத்துக் கொள்ளலாம். அது இல்லையென்றால் புதிய தனி வழி ஏற்படுத்தி வாழ்ந்து கொள்ளலாம்.  ஆனால் அனைவரது வழியையும் அரசாங்கத்தை லாபி செய்து மாற்றும் உரிமை கிடையாது.

மாற்றுக் கருத்துக்களை மதிப்பதென்பது பல விசயங்களில் இணங்குகின்ற குடிகள் ஒருவருக்கொருவர் முரண்படுகிற விசயங்களில் அவரவர் அவரவர் போக்கில் அடுத்தவர் போக்கில் குறுக்கிடாது வாழ்ந்து கொண்டும் ஒருத்தரை மற்றொருவர் பொறுத்துக் கொள்வதுமே ஆகும்.