(1958 ல் வெளியான கட்டுரை)
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களவையில் ‘ஹிந்து சட்ட மசோதா’ (Hindu Code Bill) பற்றி விவாதம் நடந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலே குறிப்பிட்ட சட்டத்தின் சில பிரிவுகள், ஹிந்து சட்டத்தின் பரம்பரையான பழக்கவழக்கங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கின்ற காரணத்தால், சாதாரண மக்களுக்கிடையில் இதற்கு மிகத் தீவிரமான எதிர்ப்பு இருந்தது. இந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள, தலைவர்கள், ஹிந்துக்களை கற்காலத்தவர் ஆக்கும் பொருட்டு, அதாவது ஹிந்துக்களை ஹிந்துக்கள் அல்லாதவர்களாக மாற்றி, தேசிய உணர்வு அற்றவர்களாக மாற்றும் தமது பிடிவாதத்தினால் ‘மசோதா’வை சட்டமாக மாற்றியே ஆகவேண்டும் என மிகத் தீவிரமான விருப்பம் உடையவர்களாக இருந்தனர். ஆனால் வரப்போகும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு தம் முயற்சியை விட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனமான செயல் என எண்ணினர்.
இந்த மசோதாவை திரும்பப் பெற்று, தமது உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பு அளித்துள்ளது என்று ஹிந்துக்களை நினைக்க வைத்தனர். விஞ்ஞானம் மற்றும் நிலையான கொள்கை, கோட்பாடுகள் என்ற அஸ்திவாரத்தின் மேல் அமைந்துள்ள நமது சமூக அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அபாயம் நீங்கிவிட்டது என்று மக்களும் மகிழ்ச்சி அடைந்து, மீண்டும் அதே தலைவர்களுக்கு வாக்களித்து அரியணையில் அமர்த்தினர். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களது கபட நாடகத்திற்கு வெற்றி முழக்கமாயிற்று. மக்களை ஏமாற்றி இத்திட்டத்தைத் தயாரித்து செயலாக்கிய மனிதர்கள், பாராட்டிற்குரியவர்கள்.
மேற்குநாட்டவரின் பக்தி
கடந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அரசு, மக்களால் விரும்பப்படுவதையும், மரியாதையையும் இழந்தால் அன்றி ‘ஹிந்து சட்ட மசோதா’வை மீண்டும் கொண்டு வர இயலாது என அறிந்தது. ஆனால் அரசை நிர்வகிக்கும் தலைவர்கள், ஹிந்து சமூகத்தை முற்றிலும் மாற்றியே தீருவது என்ற உறுதி பூண்டவர்களாகத் தென்படுகின்றனர்.
இவர்களது செயல், பாரத மண்ணில் ஹிந்துக்கள், அதாவது பாரதத்தைச் சேர்ந்த, நாட்டிற்கேயுரிய சின்னமாக எதுவுமே மீதி இருக்கலாகாது என்பது போல் உள்ளது. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மேற்கத்திய நாகரிகத்திற்கு ஒத்த வகையில் மக்களை மாற்றியுள்ளோம் என்ற திருப்தி அடையலாம்.
அவ்வாறே, அந்நியர்கள் முன் நம் அடிமைத்தனமான விசுவாசத்தையும், உலகினர் அறியும்படி வெளிப்படுத்த இயலும். இந்த தாழ்வு மனப்பான்மையுடன்தான் அவர்கள் வேலை செய்து கொண்டு உள்ளனர்.
ஹிந்துக்கள் எவற்றை எல்லாம் உயர்ந்தது என்று கருதி வழிபட்டனரோ, எவை எல்லாம் மக்களின் ஈடுபாட்டிற்கு மையமாக இருந்தனவோ, அவற்றையெல்லாம் சிதைத்து விட்டோம், பாழடித்து விட்டோம் என்று மனமகிழ்ச்சி அடையலாம்.
மக்களுடைய கோபத்திற்கு இரையாகாமல் இந்த மசோதாவிற்கு ‘சட்ட’ வடிவை எப்படித்தரலாம் என்பதுதான் அவர்களுக்கு முன்னர் உள்ள பிரச்சனை. இந்தச் சிக்கலுக்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “மசோதாவை” சின்னஞ்சிறு பகுதிகளாக, பல தலைப்புகளின் கீழ் பிரித்துள்ளனர். இவ்வாறு மக்களின் கோபம் நிராகரிப்பு ஆகியவைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, அதே “ஹிந்து கோட் பில்”, வேறு வடிவத்தில் நுழைக்கப்பட்டு வருகிறது. மெதுவாக இப்பகுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.
மக்கள் அறியாதவண்ணம் “மசோதா” முழுவதும் சட்டமாக்கப்பட்டு விடும். மக்களின் நம்பிக்கை மற்றும் ஈடுபாட்டினை அழிப்பதற்காக மெதுவாக செயல்படும் விஷத்தைத் தருவது போன்றதே இது.
பொது மக்களின் ஆதரவு இல்லை
இன்று லோக்சபாவின் முன் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவை சம்பந்தமான மசோதாக்கள் உள்ளன. அவை அனைத்தும் “ஹிந்து கோட் மசோதா” வின் அம்சங்கள். இந்த மசோதா, சட்டமாக வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்ட சில பெண்கள் இந்த மசோதாவை விரைவில் சட்டமாக்க வேண்டுமென்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர் என்று சொல்லப்பட்டது.
50 ஆயிரம் பெண்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர் எனக் கூறினர். 40 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில், வயது வந்த பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம். பெண்களின் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் 50 ஆயிரம் என்பது எம்மாத்திரம்? அதற்கு என்ன மதிப்பு? மசோதாவிற்கு ஆதரவாக ஒரு பெரிய அளவு மதிப்பு வாய்ந்த வற்புறுத்தல் ஏற்பட்டுள்ளது, அதைத் தவிர்ப்பது இயலாது என்பது போல், அந்த மகஜருக்கு ஆதரவாகப் பெரிய அளவில் பிரசாரம் செய்யப்பட்டது.
50 ஆயிரம் கையெழுத்திற்கு இத்தனை மதிப்பு என்றால், பசு, காளைகளைப் போல் நாதியற்ற, கள்ளங்கபடமற்ற மிருகவதையைத் தடை செய்யக்கோரி நாடு முழுவதுமாக 2 கோடி மக்களின், (வயது வந்தோரின்) கையெழுத்துக்கள் கொண்ட வேண்டுகோள் என்ன ஆயிற்று? அந்த விண்ணப்பம் அரசிடம் தரப்பட்டதுதானே? இன்றைய அரசின் கண்ணோட்டத்தில் இரண்டு கோடியை விட 50 ஆயிரத்தின் மதிப்பு அதிகமா?
இதனால் ஒரு கருத்து தெளிவாகத் தெரிய வருகிறது. இன்றைய அரசு ஹிந்துக்களின் வாழ்வுமுறை, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிற்கு கடுமையான எதிரி. எனவே அதனை வேரோடு அழிப்பது என உறுதிபூண்டுள்ளது. அதனது பற்களும் நகங்களும் கூட அதற்கு எதிரியாக வேலை செய்கிறது. அரசின் இந்தப் பிடிவாதக் கருத்துதான் ஹிந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 50 ஆயிரம் கையெழுத்துக்களே மிக அதிகமான எண்ணிக்கை என்ற பிரமையில் ஆழ்த்தியுள்ளது.
அதனுடன் ஒப்பிடும் போது, ஹிந்து பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் தரப்பட்டுள்ள இரண்டு கோடி மதிப்பற்றதாகத் தென்படுகிறது. பசு, காளை களின் வதையைத் தடுத்து, புனிதமான பசுவைக் காப்பாற்றும் சட்டம், ஹிந்துக்களின் ஈடுபாட்டிற்கான பெருமை பொருந்திய விஷயமாக அது இருந்த போதிலும் கூட நிராகரிக்கப்படுகிறது.
அரசு நிர்வாகத்திடம் எச்சரிக்கையுடன் இருத்தல்
‘ஹிந்து சட்ட மசோதா’ என்ற அபாயம் நீங்கிவிட்டது என்று திருப்தியுடன் வாளாவிருக்கலாகாது என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த அபாயம் அவ்வாறேதான் நிலைத்துள்ளது. பின்வாயில் வழியாக, நுழைந்து அவர்களது வாழ்வின் சக்தியை அழித்துவிடும். இருட்டில் அமர்ந்து கொண்டு விஷப்பல்லினால் தீண்டுவதற்குத் தயாராக இருக்கும் பாம்பைப் போன்றது இந்த அபாயம்.
‘ஹிந்து’ என்ற சொல்லே ‘இறைவனின் சாபம்’ என்று கருதுபவர்கள், எந்த உபாயத்தை, ஹிந்துக்களின் முன்னர் சமர்ப்பித்தாலும், மக்கள் அதை உறுதியாக எதிர்க்க வேண்டும். ‘ஹிந்து’ என்ற பெயரில் உள்ள எந்தப் பொருளின்பாலும் அவர்களுக்கு மதிப்போ, அன்போ இல்லை. அவர்களுக்கு ஹிந்துக்களின் வேதாந்த உணர்வோ, வாழ்க்கை முறை பற்றிய அறிவோ எள்ளளவும் கிடையாது.
மூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 6. / பக்கங்கள்: 83-86 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.