மதர்லேண்ட் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஶ்ரீ கே. ஆர். மல்கானிக்கும், ஆர். எஸ். எஸ் இரண்டாவது தலைவர் ஶ்ரீ குருஜி கோல்வால்கருக்கும் இடையே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் தேதி அன்று பொது சிவில் சட்டம். இந்து கோட் பில்கள், இஸ்லாமிய வாழ்க்கை முறையில் உள்ள குறைகளை களைவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற உரையாடல்.
ஶ்ரீ மல்கானி:
தேசிய உணர்விற்கு ஊட்டமளிக்க நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஶ்ரீ குருஜி:
நான் அப்படி நினைக்கவில்லை. நான் இப்படிச் சொல்வது உங்களுக்கும் பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். ஆனால் என் மனதிற்கு எது உண்மை என்று படுகிறதோ அதைச் சொல்ல வேண்டும் என்பதே என் கொள்கை.
ஶ்ரீ கே ஆர் மல்கானி:
நாட்டில் ஒற்றுமை வளர நீங்கள் தேசத்திற்கு ஒருரூபத்தன்மையை இன்றியமையாததாக கருதவில்லையா?
ஶ்ரீ கோல்வால்கர்:
ஒருங்கிணைவு (சமரசதா) என்பது வேறு. ஒருரூபத்தன்மை என்பது வேறு. ஒரு ரூபத்தன்மையின் அவசியம் எதுவும் இல்லை. இந்தியாவில் எக்காலத்திலும் எண்ணற்ற வேறுபாடுகள் மக்களிடயைே நிலவி வந்துள்ளன. ஆயினும் நாடானாது குறைவற்ற வலிமையும் ஒருங்கிணைப்பும் கொண்டதாகத் திகழ்ந்துள்ளது. ஒற்றுமைக்கு ஒருரூபத்தன்மை அவசியம் கிடையாது. ஒருங்கிணைவு இன்றியாமையாதது.
ஶ்ரீ கே ஆர் மல்கானி:
மேற்கத்திய நாடுகளில் தேசியத்தின் உதயம், சட்டங்களைத் தொகுத்தல், ஒரு ரூபத்தன்மையை ஏற்படுத்துதல் இவையெல்லாம் ஒரே நேரத்தில் நடந்ததே?
ஶ்ரீ கோல்வால்கர்:
உலக வரைபடத்தில் ஐரோப்பா முளைத்தது சமீபகால நிகழ்வு என்பதையும் அதன் நாகரிகம் மிகப் புதியது என்பதையும் நீங்கள் மறக்கக் கூடாது. ஐரோப்பா என்று ஒன்று இல்லாமல் இருந்தது. இனி அது இல்லாமலும் போகலாம். ஒரேயடியாக அச்சில் வார்த்து எடுத்தது மாதிரியான அமைப்பை இயற்கை விரும்புவதில்லை என்பது என் கருத்து. எனவே ஒற்றைத் தன்மை மிகுந்த ஐரோப்பிய நாகரிகம் வருங்காலத்தில் என்ன ஆகும் என்பதை இப்போதே சொல்வது பொருந்தாது. ‘இன்று, இப்போது‘ என்பதிலிருந்து சற்று நெடுந்தூரம் கடந்த காலத்திற்குள்ளும் நெடுந்தூரம் எதிர்காலத்திற்குள்ளும் பார்வையை செலுத்த வேண்டும். பல வேலைகளின் விளைவு தென்பட வெகுநாள் ஆகிறது. நிதானமாக, சந்தடியில்லாமல் வந்து சேர்கிறது. இந்த விஷயத்தில் பல்லாயிரம் ஆண்டுகால அனுபவம் பெற்றது நம் நாடு. சிறந்தது என்று நிரூபணம் ஆகியுள்ள சமுதாய வாழ்க்கை முறை உள்ளது. ஒற்றுமையும் வேற்றுமைகளும் ஒன்றாக இருக்க முடியும், இருக்கின்றன என்று நம்மால் கூற முடியும்.
கே ஆர் மல்கானி:
அரசியல் சாசனத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகளில் ‘பொது சிவில் சட்டம்‘ காண அரசு முயற்சி செய்யும் என்று சொல்லப்படுகிறதே?
ஶ்ரீ குருஜி கோல்வால்கர்:
உண்மைதான். ‘பொது சிவில் சட்டம்‘ என்பதுடன் எனக்கு விரோதம் எதுவும் இல்லை. ஆனாலும், அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருப்பதால் மட்டும் எதுவும் விரும்பத்தக்கதாகிவிடும் என்பதற்கில்லை. நம் அரசியல் சாசனம் பல்வேறு நாடுகளின் அரசியல் சாசனங்களில் இருந்து பெயர்தெடுத்தும், ஒட்டுப் போட்டும் தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். அது இந்திய வாழ்க்கைக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாகவோ அதை ஆதாரமாக கொண்டதாகவோ உருவாக்கப்படவில்லை.
ஶ்ரீ மல்கானி:
முஸ்லீம்கள் தாங்கள் தொடர்ந்து தனிப்பட்டு இருப்பதற்காகவே பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை ஏற்கிறீர்களா?
ஶ்ரீ குருஜி:
எந்தப் பிரிவினரும் சாதியினரும் சம்பிரதாயத்தவரும் தங்கள் தனித்தன்மையை கட்டிக் காப்பதை நான் எதிர்க்கமாட்டேன். அந்த தனித்தனமையானது அவர்களை தேசிய உணர்விலிருந்து விலகிப் போகச் செய்யாத வரை எனக்கு ஆட்சேபமில்லை.
முஸ்லீம்களுக்கு நான்குமுறை திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளதால் ‘பொது சிவில் சட்டம்‘ இல்லாத நிலையில், அவர்கள் ஜனத்தொகை, சம விகிதத்தை மீறி அதிகரித்துவிடும் என்று சிலர் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். பிரச்சனையை அணுகுவதில் இது எதிர்மறையான போக்கு என்று அஞ்சுகிறேன்.
ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சகோதர உணர்வு இல்லை என்பதுதான் உண்மையான பிரச்சனை. இது எந்த அளவிற்கு போயிருக்கிறது என்றால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லப்படுவோர் கூட முஸ்லீம்களை தனித்தோர் சமூகமாகக் கணக்கிட்டே சிந்தனை செய்கிறார்கள். தங்கள் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் குஷிப்படுத்தும் வழிமுறையைக் கடைபிடிக்கிறார்கள் என்பது உறுதி.
இன்னும் சிலர் முஸ்லிம்கள் தனிப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார்கள். ஆனால் முஸ்லீம்களின் தனி இருப்பையே ஒழித்து அவர்களை ஒரேரூபமாாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
குஷிப்படுத்துவோர் ஒருரூபமாக்க நினைப்போர் ஆகியோரிடையே அடிப்படை வித்தியாசம் ஏதுமில்லை. இருவருமே இஸ்லாமியர்களை தனிப்பட்டவர்களாக பொருந்தாப் பிரிவினராக பார்க்கிறார்கள்.
என்னுடைய கண்ணோட்டம் முற்றிலும் மாறானது. முஸ்லீம்கள் இந்த தேசத்தை அதன் கலாச்சாரத்தை நேசித்தால் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது வரவேற்கத் தக்கது.
அரசியல் விளையாட்டு விளையாடுபவர்கள் முஸ்லீம்களை கெடுத்துவிட்டார்கள் என்று நான் உறுதியாகக் கூறுவேன். காங்கிரஸ் கட்சிதான் கேரளத்தில் முஸ்லீம் லீகிற்கு புத்துயிர் அளித்து தேசம் முழுவதும் முஸ்லீம் வகுப்புவாதத்தை வளர்த்துவிட்டிருக்கிறது.
ஶ்ரீ மல்கானி:
இதே வாதத்தின் அடிப்படையில் ‘ஹிந்து கோட்‘ சட்டம் கொண்டு வந்தது கூட தேவையற்றது, விரும்பத்தகாதது தானே?
ஶ்ரீ குருஜி:
நான் உறுதியாகச் சொல்வேன். தேசத்தின் ஒருமைக்கும் மக்களின் ஒருங்கிணைப்புக்கும் ‘ஹிந்து கோட்‘ சட்டம் முற்றிலும் தேவையற்றது. யுக யுகாந்தரமாக நம் நாட்டில் எண்ணற்ற சம்ஹிதைகள் இருந்துள்ளன. ஆனால் அவைகளால் ஒரு தீங்கும் ஏற்பட்டதில்லை.
சமீப காலம் வரை கேரளத்தில் தாய்வழி உரிமையை ஆதாரமாகக் கொண்ட வழிமுறை இருந்தது. அதில் என்ன கேடு வந்து விட்டது? பழைய காலத்தவர்கள், இன்றைய காலத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வழக்கறிஞர்களும் சட்ட வல்லுநர்களும், ‘சட்டங்களை விட மரபுகளே (சம்பிரதாயங்களே) மக்களிடம் அதிக நம்பிக்கை பெற்றது. அன்றியும் அது சரியும் கூட‘ என்கிறார்கள்.
‘சாஸ்த்ராத் ரூடிர்பலீயஸி‘ (சாஸ்திரங்களைவிட சம்பிரதாயமே அதிக பலம் வாய்ந்தது). இந்த சம்பிரதாயங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திலோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் செல்வாக்குடன் இருக்கலாம் என்கிறது சாஸ்திரம்.
வட்டாரங்களைப் பொறுத்த ‘ரீதி ரிவாஜ்‘ (பழக்க வழக்கங்கள்) அல்லது சம்ஹிதைகளுக்கு எல்லா சமூகங்களிலும் அங்கீகாரம் இருந்து வந்துள்ளது.
ஶ்ரீ மல்கானி:
பொது சிவில் சட்டம் தேவையில்லையென்றால் பொது குற்றவியல் சட்டம் மட்டும் அவசியமா?
ஶ்ரீ குருஜி:
இவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. சிவில் சட்டம் தனிநபர், அவர் குடும்பம் இவை பற்றியது. ஆனால் குற்றவியல் (Criminal) சட்டம், நீதி, ஒழுங்குமுறை போன்ற எண்ணற்ற விஷயங்களுடன் சம்பந்தப்பட்டது. அது தனிநபர் மட்டுதல்லாது முழு சமுதாயத்துடனும் கூட தொடர்புள்ளது.
ஶ்ரீ மல்கானி:
நம் முஸ்லிம் சகோதரிகள் பர்தா அணிவது தொடர்கிறது. இவர்கள் பலதாரமணங்ககளால் பாதிக்கப்படுகிறார்கள். இது தகுமா?
ஶ்ரீ குருஜி:
முஸ்லிம் வழக்கங்களைக் குறித்து உங்கள் ஆட்சேபம் மக்கள் நலம் அடிப்படையில் தோன்றியதானால், தவறில்லை. இவ்வித சந்தர்ப்பங்களில் சீர்திருத்த அணுகுமுறை சரியே.
ஆனால் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்வதுபோல், சட்டங்கள் இயற்றி அவற்றின் மூலம் சமத்துவம் திணிப்பது சரியல்ல.
முஸ்லிம்கள் அவர்களாகவே தங்களின் பழைய மரபுகள், சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வரட்டும். அவர்களே பலதார பலதார திருமணங்கள் சரியல்ல என்ற முடிவுக்கு வந்தால் எனக்கு சந்தோஷமே. ஆனால் என் கருத்தை அவர்கள் மேல் திணிக்க விரும்ப மாட்டேன்.
ஶ்ரீ மல்கானி:
அப்படியென்றால் இது பெரிய சித்தாந்த ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கும்போல் தெரிகிறதே?
ஶ்ரீ குருஜி:
நிச்சயமாக இது அப்படித்தான். எல்லோரும் ஓர் அச்சில்வார்த்து எடுக்கப்பட்ட மனிதர்கள் போல் செயல்படுவது தேசங்களுக்கு நாசம் தான்.
இயற்கை ஒற்றைத்தன்மை அமைப்பை ரசிப்பதில்லை. நான் பன்முக வாழ்க்கை முறைகளைக் கட்டிக்காப்பதை ஆதரிப்பவன்.
ஆனால் இந்த வேற்றுமைகள் தேசிய ஒருமைக்கு துணைபுரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசிய ஒருமைக்கு இட்டுச் செல்லும் பாதைக்கு இடையூறாகி விடக்கூடாது.
மூலம்: ஶ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம், பகுதி 9. / பக்கங்கள்: 216-219 / வெளியீடு: டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை. / பதிப்பாண்டு: 2006.