ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?
பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி இன்று செய்ய யார் இருக்கிறார் என பரமாச்சாரியார்..
—
இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, “இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்; புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த கல்யாண வயசு reform விஷயமாக இரண்டு முறை கவுன்சிலில் மசோதா கொண்டு வந்தும் அது நிறைவேறவில்லை.
அப்புறம் தான் ஸார்தா என்பவர், இப்போது நாம் “சாரதா சட்டம்” என்று ஒரு அம்மாள் போட்ட சட்டம் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குக்கூட சரிக்குச் சமன் ஆதரவாக 50%, எதிர்தரப்பில் 50% என்றுதான் வோட் விழுந்தது. அந்த ஸந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் ஸர்க்காரானது, “காங்கிரஸ் கேட்கிற ஸ்வயராஜ்யத்தைத்தான் நாம் தரவில்லை; அவர்களுக்குத் திருப்தியாக, மதத்தைக் கெடுப்பதற்காவது ஸஹாயம் செய்யலாம்” என்று நினைத்து நாமினேட்டட் மெம்பரை வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவாக வோட் பண்ணச்சொல்லி, விவாஹ வயதை உயர்த்தியேயாக வேண்டும் என்பதைச் சட்டமாகச் செய்து விட்டார்கள். அதாவது public opinion (பொது ஜன அபிப்ராயம்) -ஐ மீறி கவர்மென்ட் பலத்தினாலே அந்த மசோதா ‘பாஸ்’ ஆயிற்று.
இப்போது நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது பழைய பழக்கங்களில் பக்தி விச்வாஸம் போய்விட்டது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சாரதாச் சட்டம் அமுலானவுடன், அவர்கள் கொடுத்திருந்த மஹாமஹோபாத்யாய டைட்டிலை “வேண்டாம்” என்று துறந்த பண்டிதர்கள் உண்டு. வங்காளத்திலிருந்த பஞ்சாணன தர்க்க ரத்ன பட்டாசார்யரும், திருவிசநல்லூரிலிருந்து காசிக்குப் போய் ஸெட்டில் ஆகிவிட்ட லக்ஷ்மண சாஸ்திரி (தமிழ்நாட்டு பிராம்மணர் என்று தெரிவதற்காக ‘லக்ஷ்மண சாஸ்திரி திராவிட்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்) என்பவரும் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள்.
இப்போது நம் ஸ்வதந்திர இந்தியாவில் ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து இப்படிக் குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?
—
தெய்வத்தின் குரல்.