ஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்…
Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் ‘இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்’ என்கிறார்கள்.
சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, “இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணானது” என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் ‘ஸெக்யூலர் ஸ்டேட்’ டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. ‘மைனாரிட்டி ரிலிஜன்’காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் (obscurantist) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
‘ஸெக்யூலர் ஸ்டேட்’ என்றால் மதச் சார்பில்லாதஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்’ என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் என்று நடந்து வருகிறது! தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.
–
தெய்வத்தின் குரல்