சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பு – அறிமுகம்

தங்களுக்கென்று பொதுவானதொரு தொடக்கம், நெடிய வரலாறு, வாழ்க்கைக் கண்ணோட்டம், அவற்றின் அடிப்படையிலான தோற்ற அடையாளங்களோடு கூடிய பழக்க வழக்க வழிபாட்டு வாழ்க்கை முறைகளை முன்னுரிமைகளைக் கொண்டு விளங்கும் மக்கள் குழுக்கள் பழங்குடிகள் எனப்படுவர். வனவாசிகளை மட்டுமல்லாது இது நாட்டில் வாழும் அனைத்து ஜாதிகளையும் குறிக்கும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்த ஒப்பதாம் ஒப்பு

வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று

போன்ற திருக்குறள்கள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.

பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்

என்று சிலப்பதிகாரத்தின் மங்கலவாழ்த்தும் பழங்குடியின் பொருள் உணர்த்தும்.

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து

என்று தொல்குடியொன்றில் வரும் தொடர்ச்சியினை வாழ்வில் ஒருவர் பெருதற்கரிய அருமருந்தாய் விவரிக்கிறது திரிகடுகத்தின் முதல் பாடல்.

பழம்பெரும் பாரத நாட்டின் பழங்குடிகளை பற்றி ஆராய்ந்த மத்திய அரசின் மானுடவியல் துறை (Anthropological Survey of India), கே. எஸ். சிங் என்பார் தலைமையில் 6748 பழங்குடிகளை பட்டியலிட்டு அவற்றுள் 4635 குடிகளைப் பற்றி ஆராய்ந்து அவர்களது வாழ்க்கை வழக்கங்களை 120 வால்யூம்களில் People of India என்ற பெயரில் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளது.

உலகின் கண்டங்கள் அனைத்துமே இப்படிப் பட்ட பழங்குடிகளால் நிறைந்ததுதான் என்றாலும் கடந்த ஐநூறு ஆண்டுகளில் கிறிஸ்தவ, ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அதற்கு முந்தைய இஸ்லாமிய பரவல் உள்ளிட்டவற்றால் இதர கண்டங்கள் தங்கள் பழங்குடி வழக்கங்களை அனேகமாக இழந்தே விட்டன எனலாம். அதுபோல அல்லாது இன்றும் பழங்குடிகள் தங்கள் வாழ்க்கை வழிமுறைகளை தொடரும் பூமி நமது பாரத பூமி.

வீழ்ந்து எஞ்சியுள்ள பிற கண்டத்து பழங்குடிகளின் மீட்சியைக் கருத்தில் கொண்டு ஐநா சபை கடந்த 2007 ஆம் வருடம் பழங்குடிகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தை வெளியிட்டது. இது United Nations Declarations on the Rights of Indigenous Peoples என்று அறியப்படுகிறது.

இதில் பழங்குடிகளுக்கென்று உள்ள உரிமைகளோடு அவற்றை நிலைநாட்ட நவீன அரசுகள் செய்ய வேண்டியன குறித்த வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளது. இது இந்தியப் பழங்குடிகள் அனைத்திற்கும் அவற்றின் மீட்சிக்கும் கூட பொருத்தமான ஒரு பிரகடனமான இருக்கிறது.

இந்தியாவிலும் ஐரோப்பியர் வருகைக்கு பிறகு மதமாற்றம், மரபு திரிப்பு, கலப்பு என பல வகைகளில் இந்திய பழங்குடிகளை அவர்களது வாழ்க்கை முறைகளை விசேசங்களைய ஒழித்து பொதுவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜாதி ஒழிப்பு, சொந்த மரபின் மீது பற்றின்றி செய்து தன் மரபுக் கொலையை தானே மேற்கொள்ளும் செயலைச் செய்ய தள்ளப்படும் சூழல் ஒவ்வொரு மரபினரையும் சூழந்துள்ளது.

தன் மரபை தான் எவ்வாறு ஒழித்துக் கொண்டேன் என்று பெருமை பேசுவோர் சீர்திருத்தவாதிகளாக போற்றவும் பாராட்டவும்பட்டு மரபை விடாது தொடர்போர் பழைமைவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்களுக்கான வெளிகள் திட்டமிட்டு இல்லாது செய்யப்பட்டு வருகிறது. தன் கையால் தன் கண்ணைக் குத்திக் கொள்வது போல இதில் ஒரு பழங்குடியைச் சார்ந்து அதன் வழக்குகளை ஒழிக்க முன் நின்றோருக்கு ஊக்கம் பாராட்டு அங்கீகாரம் அளிக்கும் போக்கும் தொடரந்து இருந்து வருகின்றது. அக்காலத்தில் இருந்தே இவற்றில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள இந்திய பழங்குடிகளும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றன. அவை அக புற தீய சக்திகள் இரண்டையுமே எதிர் கொண்டு வருகின்றன.

பழங்குடிகள் முற்றாக நிர்கதியாக்கப்பட்டுவிட்ட அமேரிக்க நாட்டில் அந்நாட்டின் 572 பழங்குடிகள் முறையாக அங்கீரிக்கப்பட்டு அவர்களுக்கென்று பிரத்யேக சட்ட திட்டங்கள் வாழ்க்கை முறைகள் நேடிவ் அமேரிக்கன் கான்ஸ்டிடியூசன் என்ற பெயரில் அமலில் உள்ளன. அமேரிக்கப் பழங்குடிகள் என்று மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, கனடா, தென்னமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் ஐரோப்பியர் ஏகாதிபத்தியத்தால் தங்கள் முன்னோர்களையும் முறைகளையும் இழந்த பழங்குடிகளும் மெல்ல மீளத் தொடங்கிவிட்டன.

இதன் போக்கு கிறிஸ்தவத்திற்கு முந்தைய ஐரோப்பா, இஸ்லாத்துக்கு முந்தைய ஈரான், எகிப்து என யாரோ சிலராவது குரல் உயர்த்தும் அளவிற்கு அந்நாடுகளிலும் சலனத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. முற்றாக இப்படி தங்கள் மரபுகளை இழந்த பிற கண்டத்து பழங்குடிகளே எழும் போது இன்றளவும் தத்தமது மரபுகளை தொடர்ந்து பேணி வரும் இந்திய பழங்குடிகளின் பேரெழுச்சி இவர்கள் அனைவருக்குமே கூட புத்துணர்வை அளிக்கவல்லதாக அமையும்.

இந்தியாவிலும் கூட பார்சி மக்கள் தங்களுக்கென சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்க்கை முறையை பெற்றிருக்கிறார்கள். சீக்கியர்களும் தங்கள் பாரம்பரிய மணவாழ்க்கை முறையை வருங்காலத்திலும் உறுதிபடுத்திக் கொள்ளும் விதமாக 2012 ஆம் வருடம் இந்திய பாராளுமன்றத்தின் ஒப்புதலோடு ஆனந்த் மேரேஜ் ஆக்ட் பெற்றனர்.

இதுபோன்று ஏனைய அனைத்து இந்திய பழங்குடிகளும் நடைமுறையில் தங்களுக்கென வாழ்க்கை முறைகளை கொண்டிருந்தாலும் அவற்றிற்குரிய அங்கீகாரமில்லாது இருக்கிறார்கள். உதாரணத்திற்கு திருமணத்திற்கு இந்து குடிகளிடையே கோத்திரம், கூட்டம், மனை என்று பலகாலமாக தொடர்ந்து வரும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவற்றையெல்லாம் முற்றாக மறுத்து இவற்றை ஒட்டுமொத்தமாக சிதைக்கும் நோக்கத்தோடு 1956 ஆம் வருட வாக்கில் இந்து கோட் பில்கள் என்ற பெயரில் பொதுவான வாழ்க்கை முறையை இந்துக்கள் மீது மட்டும் அன்றைய இந்திய அரசாங்கம் சுமத்தியது.

இந்த முயற்சியை இந்துக்களுக்காக குருஜி கோல்வால்கர் தலைமையிலான ஆர் எஸ் எஸ், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தலைமையிலான ஜன சங்கம், இந்து மகா சபா, ராம் ராஜ்ய பரிஷத், ஆதீனங்கள், மடாதிபதிகள், பழங்குடி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும் டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஆசார்ய கிருபாலினி உள்ளிட்ட தலைவர்களும், சாமான்ய இந்துக்களும் திரண்டு முற்றாக எதிர்த்து நிராகரித்தனர். ஆயினும் அரசு பொது வழக்கை சட்டமாக்கிவிட்டது.

இதனைத் தொடர்ந்தும் பழங்குடிகள் மீது தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள அவரவர் அளவில் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு நிலைநாட்டிக் கொள்ளவும் செய்துள்ளனர்.

தில்லை தீக்ஷிதர்கள், சிதம்பரம் நடராஜர் ஆலயம் தொடர்பாக தங்களுக்கே உரிமை உள்ளது எனவும் தாங்கள் விசேசமானதொரு இந்து பிரிவினர் என்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் நிலைநாட்டியது இம்முயற்சிகளில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆயினும் இந்திய அரசியல் சாசனத்தில் பழங்குடிகளை சுட்டும் விதமாக Religious Denomination Article 26 என்ற பிரிவு இருந்தாலும், அவற்றின் கீழ் யார் வருவார் என்பது தொடர்பான தெளிவான நடைமுறைகள் வகுக்கப்படவில்லை. ஒரு பெரிய சிக்கல் நேரும் போது அதன் அடிப்படையில் தலைமுறைகள் பிடிக்கும் பெரும்போராட்டத்தை நடத்தி இந்துக் குடிகள் இதன்கீழ் தஞ்சமடைந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எந்தப் பழங்குடியும் கோராத போதே பொதுவாக வகுக்கப்பட்டுவிட்ட இந்து கோட் பில் முறைக்கும் அவரவர் பாரம்பரிய முறைகளுக்கும் பிணக்கு ஏற்படும் போது பொது வாழ்க்கை முறையே சட்டப்படி செல்லுபடியாகி குடி மரபுகள் அடியோடு ஒழியும் ஆபத்தும் எழுகிறது. இதனால் இந்து குடிகளிடையே பகை வளர்ந்து இந்து ஒற்றுமையும் குலைகிறது.

பொதுவாக கொண்டு வரப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளால் பழங்குடிகளுக்கு நன்மைகள் விளைந்ததாக குறிப்பிட்டுச் சொல்வதற்கும் இல்லை. இவற்றால் இந்து குடும்பங்கள் குடிகள் நாளுக்கு நாள் சிதறி வருவதையே கணிக்க முடிகிறது.

பழங்குடிகளை தாங்கும் சக்திகளாக, அவற்றின் சிறப்பம்சங்களுகேற்றபடி குலம் பற்றி தங்களுக்கான தனியம்சங்களை நிர்ணயித்து அனுசரித்து காலங்காலமாக வாழ்ந்து குடிகளை தழைக்கச் செய்வது குலப் பெண்டிரே. பழங்குடிப் பெண்களே பல குலங்களுக்கு அஸ்திவாரம் என்பதால் பழங்குடிப் பெண்கள் மீதான பல்வேறு தாக்குதல்களும் மரபொழிப்பு கூட்டங்களால் உலகளாவி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைலிருந்து பழங்குடிப் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விரிவான ஏற்பாடுகளுக்கும் தேவை இருக்கிறது.

அரசியல் சாசனம் தரும் தனி மனித சுதந்திரத்தில், Right to Association முக்கியமான ஒன்று. தாங்கள் ஒரே பழங்குடியைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுவதும் அதனால் எழும் கூட்டு உரிமைகளை அடைவதும் தனி மனித உரிமையின் நீட்சியே. அங்கீகரிக்கப்பட வேண்டியதே.

ஒரு நாட்டில் பழங்குடிகள் தங்களை தற்காத்துக் கொள்ள முதல் தேவை அதற்குரிய அங்கீகாரம் தான். சிறப்புகளை மறுத்து பொதுவாக அணுகத் தொடங்கும் போது சமூகங்கள் சிதைவுறத் தொடங்குகின்றன.

தத்தமது அடுத்த வாரிசுகளை தங்கள் வழிகளை முறைகளை அடையாளங்களைச் சொல்லி வளர்ப்பது, தங்கள் முறைகளை அனுசரித்து கல்வி அளிப்பது, வழிபாட்டு முறைகளில் ஈடுபடுத்துவது என அனைத்திலும் பழங்குடிகளுக்கு இருக்கக் வேண்டிய சுதந்திரம் இன்றைய சூழலில் பெரும் நெருக்குதலுக்கு ஆளாகின்றது.

இந்தியாவில் நாடளாவி மைனாரிட்டி சமயங்கள் எனவும் மாநிலம் பொருத்து மொழி சிறுபான்மையுனர் எனவும் அரசியல் சாசனத்தால் கொடுக்கப்படும் கல்வி தொடர்பான வலுவான சலுகைகள் ஒவ்வொரு பழங்குடிக்குமே பொருத்தமானதுதான்.

பழங்குடிகளை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பொதுவாக்கி இல்லாது செய்யும் விதத்தில் அமைந்துள்ளன. இப்படி ஒவ்வொரு பழங்குடியும் எதோ ஒரு விதத்தில் தாக்கப்படும் போது தன்னால் முடிந்த அளவிற்கு எதிர்வினையாற்றுகிறது. சில முயற்சிகள் வெற்றி பெறுகின்றன. பல முயற்சிகள் தோல்வியடைந்து மேற்கொண்டு மல்லுக்கட்ட திராணியின்றி வழக்கொழிந்து போகின்றன. இப்படி இந்திய நாடு இழந்தவை பல.

பொதுவாக்கி தாக்கப்படும் போது தனித்தனியாக எதிர்கொள்ளாது திரண்டு எதிர்கொள்ள வேண்டும் என்ற நினைவு சமுதாயத்தில் ஜல்லிக்கட்டு, சபரிமலை, முறை சாரா திருமண எதிர்ப்பு விவகாரங்களில் எழுந்தது நம்பிக்கையளிக்கும் நிகழ்வுகளாகும். இதுவே இந்துத் தன்மையும் கூட.

நவீன காலத்திற்கு ஏற்ப இந்திய பழங்குடிகள் இவற்றை எதிர்கொண்டு தத்தமது தொடர்ச்சியை காலாகாலத்திற்கும் உறுதி செய்து கொள்ளும் விதமாக உலகளாவி இதே சிந்தனையுள்ளோர் எழுச்சி கொண்டு ஐநாவின் பிரகடனம் வரை கண்டிருப்பது இதற்கான காலம் உலகளாவி கூடி வருகிறது என்பதற்கான அறிகுறியே.

இவற்றைக் கருத்தில் கொண்டு குடிகளுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ள பொதுவான தளங்களே பொதுவாக மறுக்கப்பட்டு வரும் சூழலில் Hindu Spiritual Service Fair போன்றவை அவற்றின் மீட்சிக்கு பொது தளம் அமைத்து தந்து பெரும் பங்காற்றி வருகின்றன.

அரசு ஆலயங்களை பராமரிப்பதும் நிர்வகிப்பதும் கூடாது என்பது போலவே குடிகளுக்கான வாழ்க்கை முறையினை வகுக்கவும் கூடாது. குடிகளின் வாழ்க்கை முறை அங்கீகாரத்திற்காகவும் தொடர்ச்சிக்காகவும் வேண்டிய காரியங்களை குடியமைப்புகளோடும், குடியினரோடும், குடியினரைக் கொண்டும், ஒத்த நோக்கம் கொண்டுள்ள பிற அமைப்புகளோடும் செயல்பட்டு வரும் அமைப்பு சர்வதர்மா.

வரும் நூற்றாண்டு உலகளாவி பழங்குடிகளின் எழுச்சி நூற்றாண்டாக அமைய வேண்டும். நவீன அறிவியல் தொழில்நுட்பங்களின் துணையோடு இந்திய பழங்குடிகள் பற்றிய ஆய்வுகளை சர்வதர்மா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்திய பழங்குடிகள் உலகளாவி பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்து வரும் வேளையில், பரவும் நாடுகளில் கூட பழங்குடி வழக்குகளில் தொடரத்தக்கவற்றை தொடர வேண்டிவற்றை தாங்களே அதற்குரிய முடிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் செயல்களில் ஈடுபடவேண்டியுள்ளது.

உலகையே கிறிஸ்தவ மயமாக்குவோம், உலகையே இஸ்லாமிய மயமாக்குவோம், கம்யூனிச கார்பரேட் மயமாக்குவோம் என்று பழங்குடிகளும் அவர்களது வழக்கங்களும் சிதைவுக்கு உள்ளாகும் தருணத்தில் அதற்குரிய எதிர்வினையாக உலகை மறுபடியும் நற்குடிகள் மயமாக்குவோம் என்று இந்திய பழங்குடிகளும் அரசும் கூட தங்களது உலகம் பரந்த நடவடிக்கையின் ஒரு அம்சமாக கொண்டு பணியாற்ற வேண்டியுள்ளது.

சொந்த நாட்டில் தடம் மாறியோரை முன்னோர் வழிக்கு திருப்பும் செயல்களுக்கு நிகராக இப்படி உலகளாவி தங்கள் முன்னோர் வழக்குகளை தக்க வைத்துக் கொள்ள விழைவோரோடு இணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

ஒன்றே யென்னின் ஒன்றே யாம், பலவென் றுரைக்கின் பலவே யாம்
அன்றே யென்னின் அன்றே யாம், ஆமென் றுரைக்கின் ஆமே யாம்
இன்றே யென்னின் இன்றே யாம், உளதென் றுரைக்கின் உளதே யாம்
நன்றே நம்பிக் குடிவாழ்க்கை, நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா! – கம்பர்

11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மாவின் அரங்கு

11 வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மா

வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கடந்த 28/01/2020 தொடங்கி நடைபெற்று வரும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி 2020 இல் சர்வதர்மா பழங்குடிகள் கூட்டமைப்பின் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு நமது பணிகள் குறித்து வருவோரிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கண்காட்சியினை பார்வையிட வருவோர் அரங்கு எண் S3 இல் நமது உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடலாம்.

வாய்ப்பளித்த ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி நிர்வாகத்திற்கு சர்வதர்மா சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா?

ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி இன்று செய்ய யார் இருக்கிறார் என பரமாச்சாரியார்..

இருந்தாலும் முன்பெல்லாம் சீர்திருத்த வாதங்களுக்கு எதிர் வாதம் செய்ய ஜனங்களுக்குத் தெரியாவிட்டாலுங்கூட, “இதுவரை பெரியவர்கள் எப்படிப் பண்ணி வந்திருக்கிறார்களோ அப்படியே போவோம்; புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்ற அபிப்ராயம் இருந்தது. அதனால்தான் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்த கல்யாண வயசு reform விஷயமாக இரண்டு முறை கவுன்சிலில் மசோதா கொண்டு வந்தும் அது நிறைவேறவில்லை.

அப்புறம் தான் ஸார்தா என்பவர், இப்போது நாம் “சாரதா சட்டம்” என்று ஒரு அம்மாள் போட்ட சட்டம் மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குக்கூட சரிக்குச் சமன் ஆதரவாக 50%, எதிர்தரப்பில் 50% என்றுதான் வோட் விழுந்தது. அந்த ஸந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் ஸர்க்காரானது, “காங்கிரஸ் கேட்கிற ஸ்வயராஜ்யத்தைத்தான் நாம் தரவில்லை; அவர்களுக்குத் திருப்தியாக, மதத்தைக் கெடுப்பதற்காவது ஸஹாயம் செய்யலாம்” என்று நினைத்து நாமினேட்டட் மெம்பரை வைத்து இந்த மசோதாவுக்கு ஆதரவாக வோட் பண்ணச்சொல்லி, விவாஹ வயதை உயர்த்தியேயாக வேண்டும் என்பதைச் சட்டமாகச் செய்து விட்டார்கள். அதாவது public opinion (பொது ஜன அபிப்ராயம்) -ஐ மீறி கவர்மென்ட் பலத்தினாலே அந்த மசோதா ‘பாஸ்’ ஆயிற்று.

இப்போது நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது பழைய பழக்கங்களில் பக்தி விச்வாஸம் போய்விட்டது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சாரதாச் சட்டம் அமுலானவுடன், அவர்கள் கொடுத்திருந்த மஹாமஹோபாத்யாய டைட்டிலை “வேண்டாம்” என்று துறந்த பண்டிதர்கள் உண்டு. வங்காளத்திலிருந்த பஞ்சாணன தர்க்க ரத்ன பட்டாசார்யரும், திருவிசநல்லூரிலிருந்து காசிக்குப் போய் ஸெட்டில் ஆகிவிட்ட லக்ஷ்மண சாஸ்திரி (தமிழ்நாட்டு பிராம்மணர் என்று தெரிவதற்காக ‘லக்ஷ்மண சாஸ்திரி திராவிட்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்) என்பவரும் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள்.

இப்போது நம் ஸ்வதந்திர இந்தியாவில் ராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து இப்படிக் குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது?

தெய்வத்தின் குரல்.

தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..

ஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்…

Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் ‘இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்’ என்கிறார்கள்.

சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, “இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணானது” என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் ‘ஸெக்யூலர் ஸ்டேட்’ டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. ‘மைனாரிட்டி ரிலிஜன்’காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் (obscurantist) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

‘ஸெக்யூலர் ஸ்டேட்’ என்றால் மதச் சார்பில்லாதஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்’ என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் என்று நடந்து வருகிறது! தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.

தெய்வத்தின் குரல்